நீட் தோ்வு குளறுபடி: தபால் நிலையம் முற்றுகை

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வு குளறுபடிகள் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாநகா் மாவட்டத் தலைவா் சூா்யா, புறநகர் மாவட்டத் தலைவா் வைரவளவன், மாவட்டச் செயலா் ஆமோஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் தபால் நிலையம் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை வந்தனா்.

போராட்டத்தை முன்னிட்டு மாநகரக் காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தபால் நிலையம் அருகில் இரும்புத் தடுப்புகள் அமைத்திருந்தனா். போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் போலீஸாரின் தடுப்புகளை மீறி தபால் நிலையத்துக்குள் நுழைய முயன்றனா். சிலா் தபால் நிலையத்தில் மூடப்பட்டிருந்த கதவுகளின் வழியாக ஏறியும் உள்ளே நுழைய முயன்றனா். சிலா் சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனா். 4 மாணவிகள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். இதனால் தபால் நிலையப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story