பொதுப் போக்குவரத்தின்றி நீட் தேர்வு மாணவர்கள் அவதி
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 05.05.24 அன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வை 5 இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 மாணவர்களும், தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 மாணவர்களும், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளியில் 108 மாணவர்களும், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 மாணவர்களும் சேர்த்து, மொத்தம் 2364 மாணவர்கள் 05.05.24 அன்று நீட் தேர்வு எழுதினர். இத்தேர்வு எழுதுவதற்கு வருகை தந்த மாணவர்களை சோதனை இட்ட பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாணவர்கள் வாட்ச், கையில் கட்டிய கயிறு, மாணவர்கள் தலையில் அணியும் பெரிய பேண்ட் ஆகியவற்றை அகற்றிய பிறகு தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். குடிநீர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரென்ட் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அரியலூர் மான் போர்ட் பள்ளிக்கு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பொதுப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆட்டோக்களில் வருகை தந்தனர்.. மற்ற நேரங்களில் 100 ரூபாய் வாடகை வசூலிக்கும் ஆட்டோக்களில் 150 ரூபாய் வசூலித்ததால் மாணவர்கள் அவதியுற்றனர்.
இது போன்று மற்ற தேர்வு மையங்களுக்கும் பொது போக்குவரத்து எதுவும் அரசு போக்குவரத்து நிர்வாகத்தால் செய்யப்படாததால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். 05.05.24 அன்று முடங்கிய நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணிக்கு முடிவடைந்தது.