புதிய பேருந்து நிலையம் செல்ல பாலம் - எ.வ.வேலு நேரில் ஆய்வு

புதிய பேருந்து நிலையம்  செல்ல பாலம்  -  எ.வ.வேலு நேரில் ஆய்வு

அமைச்சர் ஆய்வு 

திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் எளிதில் வரும் வகையில் பாலம் கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் ரோட்டில் 25 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட டான்காப் எனப்படுகிற எண்ணெய் பிழியும் தொழிற்சாலை இயங்கிய இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண்மை துறையிடம் இருந்த 6 ஏக்கர் நிலம், இதையும் சேர்த்து 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது 6.6 ஏக்கரில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டு வேலைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையம் கட்டுவதற்காக டான்காப் பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு டான்காப் பின்புறம் பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை மேம்பாலத்திலிருந்து பார்க்கும் பொதுமக்கள் பழைய பஸ் நிலையமும், புதிய பஸ் நிலையமும் ஒரே அளவு போல் உள்ளதாக பேசி செல்வதை பார்க்க முடிந்தது.

மேலும் மேம்பாலத்தில் சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் பாலத்தின் கீழ் சுற்றி வந்துதான் புதிய பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல், கால விரயம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அவருடன் தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிராஜ் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். பஸ்கள் உள்ளே வரும் வழி மற்றும் வெளியே செல்லும் வழி, சர்வீஸ் சாலை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து சர்வீஸ் சாலைக்காக புதிய பஸ் நிலைத்திற்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என (கடைகளின் முன் பகுதி) முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மேம்பாலத்தில் சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு சுலபமாக வரும் வகையில் மேம்பாலத்திலிருந்து புதிய பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் சிறு பாலம் ஒன்று கட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது போளுர் சாலையில் உள்ள பஸ் நிலையம், வணிக வளாகம் போல் காட்சியளிப்பதாலும், நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருப்பதாலும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பயணிகள் மறுமுனையில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்ல நடை மேம்பாலத்தை கட்டித் தர எந்த ஆட்சியாளர்களும் முயற்சி எடுக்காததால் தினம், தினம் போக்குவரத்து நெரிசலிலும் சிக்கி அவதி அடைகின்றனர்.

எனவே இந்த குறைகளை போக்கிடும் வகையில் தற்போது கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன்,விசாலமாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story