புதிய பேருந்து நிலைய பணி 4 மாதமாக நிறுத்தம்.
திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறம் இயங்கி வரும் அண்ணா பேருந்து நிலையம் குறுகிய இடமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணியருக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி—அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, நான்கரை ஏக்கர் பரப்பில் கடந்தாண்டு, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021- -22ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகளை அமைச்சர் நேரு 2022ல் துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அமைத்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஒப்பந்தாரருக்கு, 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து புதிய பேருந்து நிலையம் பணி துரித வேகத்தில் நடந்து வந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர் தயாராக இருந்தார். ஆனால், ஒப்பந்தாரருக்கு தொகை வழங்கப்படாததால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நவீன பேருந்து நிலைய பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பணிகள் நடக்காமல் உள்ளதால் புதிய பேருந்து நிலையத்தில், கால்நடைகள் ஓய்வெடுக்கும் நிலையமாக மாறியுள்ளது. இதுதவிர இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என திருத்தணி நகர மக்கள், பேருந்து ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.