வருது புதிய வகுப்பறை கட்டடம்; இனி மழைத் தண்ணீர் தொல்லை இல்ல!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அடிக்கடி கண்மாய் நீர் புகும் நிலையில், ரூ.10 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளூர்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக கண்மாய்களில் நீர் பெருகி கண்மாய் நீரானது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்குள் புகுந்தது இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பள்ளியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான குறிஞ்சிமுருகன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பள்ளியில் இருந்து நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நீர் தேங்காாமல் இருப்பதற்கு பேவர் பிளாக் கல்கள் பதிப்பதற்கு பூமி பூஜைகள் செய்து பணிகளை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.

பின்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது விடியா திமுக ஆட்சியில் எந்த ஒரு நலத்திட்ட பணிகளும் செய்யவில்லை எனவும் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டிதர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அதிமுக எம்எல்ஏ உறுதி அளித்தார்.

Tags

Next Story