புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி

புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி

செங்கல்பட்டு மாவட்டம், குருவன்மேடு ஊராட்சியில் புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


செங்கல்பட்டு மாவட்டம், குருவன்மேடு ஊராட்சியில் புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி இளைஞர்கள், ஒரகடம், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த கிராமத்தில், குருவன்மேடு - வெண்பாக்கம் செல்லும் 2 கி.மீ., தொலைவு சாலை உள்ளது.

அது, பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக, இந்த சாலையை பயன்படுத்தி வெண்பாக்கம், தாசரிகுன்னத்துார் வழியாக சிங்கபெருமாள் கோவில் செல்வோர் அவதியடைந்து வந்தனர். மேலும், வயலுக்கு செல்லும் விவசாயிகள், அறுவடை காலங்களில் தங்களின் வாகனங்களை எடுத்துச் செல்லும் போது சிரமமடைந்தனர். எனவே, இந்த சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் விளைவாக, கடந்த ஆண்டு, இந்த சாலை அமைக்க, தமிழக அரசு 3.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த சாலையின் குறுக்கே, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், குருவன்மேடு ஏரி பாசனக் கால்வாய் மற்றும் உபரி நீர் வெளியேறும் கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டன. தற்போது, பழைய சாலையை பெயர்த்து, புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story