ராமநாதபுரம் விவசாயத்தை காக்க புதிய முயற்சி

ராமநாதபுரம்  விவசாயத்தை காக்க புதிய முயற்சி

வயலில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி

ராமநாதபுரம் விவசாயத்தை அழிக்கும் பன்றிகளிடமிருந்து ஒலிபெருக்கி மூலம் விவசாயிகள் காத்து வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 ஆயிரத்து 837 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ராமநாதபுரத்தில் பெரும்பாலும் தூவுதல் முறையில் என்எல்ஆர், கோ 43 உள்ளிட்ட நெல் ரகங்கள் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காட்டு பன்றிகள் தொல்லை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்யாமல் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய மணிமாறன் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நாய்கள் குரைப்பது போன்ற ஒலிபெருக்கி கருவியை பயன்படுத்தி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விவசாய மணிமாறன் கூறுகையில். கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகளவில் உள்ளது. விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நாய்கள் குரைப்பது போன்ற ஒலியை தரக்கூடிய இரண்டு ஒலிபெருக்கி கருவிகளை மதுரையில் வாங்கி வந்து விவசாய நிலத்தில் பொருத்தியுள்ளேன்.

இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை தொடர்ந்து நாய் குரைப்பது போன்ற ஒலியை இந்த கருவி ஒலித்துக் கொண்டே இருக்கும். அரை கிலோமீட்டர் சுற்றளவு வரை ஒலியின் சத்தம் கேட்கும், மேலும் இந்த கருவியை கையில் எடுத்து கொண்டு வயல்வெளி முழுவதும் நடந்துசென்றும் நெற்பயிர்களை காப்பாற்றி வருகிறேன்.

இந்த ஒலிபெருக்கி காரணமாக தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை குறைந்துள்ளது. காட்டு கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளதால் காட்டு பன்றிகள் கருவேல மரங்களுக்குள் ஒளிந்து விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் காட்டு கருவேல மரங்களையும், காட்டுப்பன்றிகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags

Next Story