எருமப்பட்டி ஒன்றியத்தில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தகவல்.

386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பவித்திரம்புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்துகொண்டு 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பேசுகையில்.... எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் உரிய கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சிகளை சேர்ந்த 89க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.360.00 கோடி மதிப்பில் எருமப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அறிவிக்க உள்ளார்கள். சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு விளையாட்டு மைதானம் வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விளையாட்டு மையதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ரூ.97.67 இலட்சம் மதிப்பில் கொல்லிமலை பகுதிக்கு சார்நிலை கருவூல அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எம்.சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story