அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும்

அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும்
கோரிக்கை மனு
புதிய மரக்கன்றுகள் நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

பேராவூரணி கடைவீதியில், சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலரும், பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு உறுப்பினருமான மகாலட்சுமி சதீஷ்குமார், பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச் சுவருடன் கூடிய தார்ச் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டது. நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் தொடங்கி பட்டுக்கோட்டை சாலை செல்வ விநாயகர்புரம் வரை இவ்வாறு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதேபோல், சேதுசாலையிலும் சாலை விரிவாக்கத்தின் போது, நூற்றுக்கணக்கான மிகப் பழமை வாய்ந்த வேம்பு, புளி, வாகை, புங்கன் மரங்கள் என அனைத்தும் வெட்டி முழுவதுமாக அழிக்கப்பட்டது. தற்போது கோடை காலத்தில் அதற்கான விளைவு பட்டவர்த்தனமாக தெரிகிறது. சாலையில் பெரியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் வணிகர்கள், பயணிகள் அனைவரும் நடக்க முடியாமலும், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒதுங்கக் கூட இடமில்லாமலும் தவித்து வருகின்றனர்.

எனவே, நகரில் கோடையின் தாக்கத்தை தடுக்கும் வகையில், கடைவீதி, ஆவணம் சாலை, புதுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை, முதன்மைச் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்கவும், வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், தற்போதைய மற்றும் அடுத்த தலைமுறையினரை பாதுகாக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் பேராவூரணி நகரை பசுமையோடு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story