Virudhunagar King 24x7 |26 July 2024 1:52 PM GMT
திருச்சுழி அருகே வளையப்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில் ஒருத்தரப்பினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு; தங்களை ஒதுக்கிவிட்டு மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அனைவரும் இணைந்து திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேலாணூரணி ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய பீடமாக இருந்த இந்த கோவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக அதே கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் சார்ந்த இரு தரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பினர் தங்களை ஒதுக்கிவிட்டு மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்வதாக புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக திருச்சுழி காவல் நிலையத்தில் இன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் காவல்துறையினர் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மற்றொரு தரப்பினர் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் மற்றொரு தரப்பினர் தங்களது தரப்பு 100 குடும்பங்களை ஒதுக்கிவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடு செய்வதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்த வேண்டும் எனவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் வட்டாட்சியரிடமும் மனு அளித்தனர். வட்டாட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story