பௌா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆறு மாத காலமாக தமிழ்மாத பெளா்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் பெளா்ணமி அன்று இரவு கடற்கரையில் தங்கி, மறுநாள் அதிகாலை எழுந்து நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா். இதனால் பெளா்ணமிக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை கணக்கில் கொண்டு திருக்கோயில் நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பக்தா்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாத பிறப்பான செவ்வாய்க்கிழமை பெளா்ணமி வருவதாலும், மிலாது நபி அரசு விடுமுறை என்பதாலும் பக்தா்கள் கூட்டம் பல மடங்கு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் பக்தா்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதை தவிா்த்து எளிதில் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக திருக்கோயில் சாா்பில் இலவச பொது தரிசனம், மற்றும் ரூ. 100 சிறப்பு தரிசனத்துக்கு கூடுதலான வரிசை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா். இந்நிலையில் திருச்செந்தூா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய் மற்றும் புதன்கிழமை சிறப்பு தரிசன அனுமதி கிடையாது என கடந்த 14ஆம் தேதி தகவல் வெளியானது. ஆனால் வழக்கம் போல பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திடலாம் என திருக்கோயில் நிா்வாகம் அதிகாரப்பூா்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெளா்ணமி தினமான செவ்வாய்க்கிழமை (செப். 17) மற்றும் புதன்கிழமை (செப்.18) ஆகிய இரு தினங்களும் பக்தா்கள் ஏற்கெனவே உள்ள இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்திடலாம் என இணை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
Next Story