திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தரமற்ற முறையில் ரோடுகள் அமைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டும் வீடியோ வைரலாகிறது.திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. தற்போது மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே மில்லிங் செய்து பல நாட்கள் கழித்து ரோடு போடுவதாக புகார் இருந்தது. இந்நிலையில் 40 வது வார்டு யூஸ்பியா நகர்,பூச்சி நாயக்கன்பட்டி மெயின் ரோடு பகுதிகளில் 2 நாட்களாக தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.ரோடுகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ஏற்கனவே இருந்த பழைய தார் ரோடுகளை முறையாக மில்லிங் செய்து அகற்றாமல் மேல்பகுதியில் மட்டும் அப்படியே தார்களை ஊற்றி பெயரளவில் தார் ரோடு போடுகின்றனர். ரோட்டினை கைகளினால் பெயர்த்து எடுக்கும் அவல நிலை தான் உள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு பணிகள் முறையாக நடக்கிறது. மில்லிங் செய்து 2 லேயர்கள் கொண்ட ரோடுகள் தான் போடுகிறோம். வீடியோவில் குற்றச்சாட்டு வைப்பவர்கள் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் . ரோடு போடும் பணி நடக்கும்போது போதே இந்த வீடியோவை எடுத்துள்ளனர். இருந்தாலும் மாநகராட்சி தரப்பிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் 'என்றனர்.
Next Story