கந்த சஷ்டி விழாவுக்கு விரைவு தரிசன கட்டணம்? திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் விளக்கம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவுக்கு ரூ. 1000 விரைவு தரிசன கட்டணம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறவுள்ள 02.11.2024 முதல் 09.112024 வரையிலான 8 தினங்களுக்கு மட்டும் கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண சீட்டாக நபர் ஒன்றுக்கு ரூ.1000 என நிர்ணயம் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.1000 நிர்ணயம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகிறது எனவும் திருக்கோயில் தக்கார் மற்றும் இணை ஆணையர் பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது.  இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவ்வாறான தகவல் ஏதும் திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்படவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகனிடம் கேட்டதற்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழக்கமாக பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அதிகபட்சமாக ரூ. 100 டிக்கெட் தான் நடைமுறையில் உள்ளது. நவ. 2ஆம் தேதி தொடங்க உள்ள கந்த சஷ்டி விழா கட்டணம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் திருக்கோயில் சார்பில் வெளியிடப்படவில்லை என மறுப்பு தெரிவித்தார்.
Next Story