இராசிபுரம் : உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு.!!

X
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் 2-ஆம் கட்டமாக “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு பணிகள் தொடக்கம். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் இன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் 2 –ஆம் கட்டமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், குமாரபாளையம் மற்றும் மோகனூர் ஆகிய 8 வட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று 2 –ஆம் கட்டமாக இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இராசிபுரம் வட்டம், ஒடுவன்குறிச்சி கிராமத்தில் உள்ள நலவாழ்வு மையத்தில் நோயாளிகள் வருகை விபரம், காய்ச்சல் தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விபரம், மழைக்கால நோய் தொற்றுக்களுக்கான மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், தொ.ஜேடர்பாளையம் கிளை நூலகத்தில் நூல்களின் விபரம், தினசரி வருகை புரியும் வாசகர்கள் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவை குறித்தும், கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் குறித்த விபரம், நில ஆவணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், தொ.ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த மாணவ, மாணவியர்களின் விபரம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவேடு, சமையலறை கூடங்கள், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும், ஆர்.ஜேடர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் பொருட்களின் இருப்பு, பொருட்களின் தரம், விற்பனை விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள், பயன்பெறும் மொத்த ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் டிராக்டர் பராமரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இ-சேவை மையம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, தொ.ஜேடர்பாளையம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பணியாளர்கள் இருப்பு, மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை, விழிப்புணர்வு பணிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், சுகாதார நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு இந்நிதியாண்டிற்கான மொத்த வரி வருவாய், சொத்து விவரங்கள், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மொத்த கடைகளின் எண்ணிக்கை, கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுபொருட்களின் தரம், துணிப்பை பயன்பாடு, பேருந்து வழித்தட விபரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் அண்ணா சாலை, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், இராசிபுரம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். முன்னதாக, இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாற்றுத்திறனாளி அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், மனுவினை பரிசீலினை செய்து உடனடியாக இரண்டு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story