Chennai King 24x7 |11 Jan 2025 4:37 PM GMT
அருப்புக்கோட்டை நகரில் புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசை கண்டித்து வரும் 20ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, ரயில்வே அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழ்நாடு பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Next Story