பலி
உளுந்துார்பேட்டை அருகே டயர் வெடித்ததால் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி, ஈச்சர் லாரி மீது மோதியதில் டிரைவர் இறந்தார். திருச்சியில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி (டிஎன்.66, ஏபி. 3566) சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 7:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு மேம்பாலம் அருகே வந்தபோது, லாரியின் பின்புறம் வலது பக்க டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியா தடுப்பு கட்டை மீது ஏறி எதிர் சாலையில் பாய்ந்தது.அப்போது புதுச்சேரியில் இருந்து நிலக்கோட்டை நோக்கி சென்ற ஈச்சர் லாரியின் (டிஎன்.48, ஏஎப். 8667) மீது காஸ் சிலிண்டர் லாரி மோதியது. இதில், ஈச்சர் லாரி டிரைவர் நிலக்கோட்டையை சேர்ந்த சுரேஷ்குமார், 49, படுகாயமடைந்து இறந்தார். ஈச்சர் லாரியில் வந்த பெருமாள், 42, காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநாவலுார் போலீசார், சுரேஷ்குமாரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story