சிவன்மலை முருகன் கோவிலில் பொது விருந்து

X
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, சாதி-மத-இன வேறுபாடின்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்திடல் வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தை வலியுறுத்திய, முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான பிப்.3 ஆம் தேதி ஏழை, எளிய மக்கள் கலந்து கொண்ட சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து காங்கேயம் அருகே, சிவன்மலையில் உள்ள சிவன்மலை முருகன் மலைக் கோவிலில் நடைபெற்றது. இதில், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன், சிவன்மலை கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, கோயில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள் மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தினசரி 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தை முன்னிட்டு, திங்கள்கிழமை 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அரசுத்துறை அலுவலர்கள் பலரும் இதில் கலந்து கொள்ளவில்லை. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவதால், காங்கேயம் பகுதி அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதால், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை, என அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக காங்கேயம் வருவாய் ஆய்வாளர், சிவன்மலை கிராம நிர்வாக அலுவலர் இருவரும் சாமி கும்பிட்டு விட்டு, அன்னதான உணவருந்திச் சென்றனர். இதனால், எந்த பரபரப்பும் இல்லாமல், சிவன்மலை முருகன் மலைக் கோயில் வளாகம் காணப்பட்டது.
Next Story

