
X
காரியாபட்டி அருகே நாட்டு கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 நாட்டு கோழிகள் உள்ளிட்ட ரூ 50,000 மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசம்; தீயணைப்பு நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பிசின்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் நாட்டுக்கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் தனித்தனியாக தென்னங்கீற்றினால் மூன்று செட்டுகள் அமைத்து நாட்டுக்கோழிகளை சக்திவேல் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று இந்த கோழிப்பண்ணையின் அருகே கிடந்த குப்பையில் சிலர் தீ வைத்துள்ளனர். இந்த தீ காற்றில் பரவி அருகில் உள்ள கோழி பண்ணையின் செட்டில் விழுந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து இரண்டு செட்டுகளில் தீ மள மள பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை கண்ட சக்திவேல் உடனடியாக ஓடி வந்து கோழிப்பண்ணையின் கதவை திறந்து விட்டுள்ளார். காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். இதில் பெரும்பாலான கோழிகள் பண்ணையை விட்டு வெளியே ஓடி தப்பியது. எனினும் தீ வேகமாக பரவியதால் இந்த தீ விபத்தில் 30 நாட்டுக்கோழிகள் உள்ளிட்ட ரூபாய் 50,000 மதிப்புடைய பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகின. காரியாபட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கோழி பண்ணையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காரியாபட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாட்டுக்கோழிகள் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story

