திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வைக்கோல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் விவசாயம் செழிக்கும் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டுவார்கள் என கூறப்படுகின்றது.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருக்கோவில் ஆகும்.  சிவன்மலை  கோவில் சிறப்புகளில் பிரசித்திபெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் அனுமதி கிடைத்தது என்று கூறப்பட்டு ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு  மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பெரிய செம்மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின்  கனவில் "திருவோட்டில் விபூதி நிரப்பட்டு அதில் ருத்ராட்சம் மாற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம்" ஆகியவைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் இன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த சபாபதி (48) என்பவரின் கனவில் ஆண்டவர் வைக்கோல்  வைத்து பூஜை செய்யுமாறு முருகன் கையில் வேலுடன்  குழந்தை ரூபத்தில் மயில் அருகே இருக்க வைக்கோல் போர் அருகே இருந்து  கூறியதாகவும் இதை அடுத்து கோவில் நிர்வாகத்திடமும் அர்ச்சகரிடமும் தெரிவித்துள்ளார். இதை அடுத்து பூ கேட்கப்பட்டு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி பூ கொடுக்கப்பட்டது. பின்னர் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வைக்கோல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது பற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு  பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வைக்கோல் வைத்துள்ளதால் விவசாயம் செழிக்கும் விவசாயிகள் அதிக மகசூல்கள் பெற்று அதிகப்படியான லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும் என்கின்றனர் பக்தர்கள்.
Next Story