கனமழை

X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 100 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. இந்த நாள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் வெயிலும் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. பின்னர் 5 மணி முதல் தொடர்ந்து 40 நிமிடம் வரை மலை கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னி மலையில் மாலை 4 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அந்தியூரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 30 நிமிடம் வரை பெய்தது. இதேபோல் தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், புதுப்பாளையம், மூலக்கடை, மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரம் மழை கொட்டியது. சத்தியமங்கலத்தில் மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கி 35 நிமிடம் பலத்த மழை பெய்தது. ஆசனூர் தாளவாடி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. புஞ்சை புளியம்பட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகம் காரணமாக மேட்டூர் -பவானி ரோட்டில் உள்ள ஊமாரெட்டியூர் பிரிவு அருகே உள்ள ராட்சத புளியமரம் பாதி பெயர்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் அந்த நேரத்தில் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து ஜேசிபி எந்திரம் டிராக்டர் நவீன கருவிகள் கொண்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. நேற்று மாவட்ட முழுவதும் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாநகரப் பகுதியில் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சேர்த்து மொத்தம் 303 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- ஈரோடு - 42.20, மொடக்குறிச்சி - 29, பெருந்துறை - 25, நம்பியூர் - 25, எலந்தகுட்டைமேடு - 24.40, சத்தியமங்கலம் - 22, கோபி - 19.20, சென்னிமலை - 18.40, கொண்டேரி பள்ளம் - 17, கவுந்தப்பாடி - 15.60, அம்மாபேட்டை - 15.40, பவானி - 11.80, பவானிசாகர் - 10.60, கொடுமுடி - 6, வரட்டு பள்ளம் - 2
Next Story

