சிறைப்பிடிப்பு

X

அந்தியூர் அருகே சிறு வண்டுகள் தொல்லையால் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. பர்கூர் செல்லும் வழியில் மூலக்கடை அருகில் முத்தரசன் குட்டை என்ற இடத்தில் சாலை அகலமாக இருப்பதால் அப்பகுதியில் லாரியை நிறுத்தி டீ குடித்தும் உறங்கியும் செல்வதை டிரைவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலத்துக்கு கோழி எரு லோடும் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த லாரிகள் இரவில் மட்டும் செல்கின்றன. இந்த லாரிகளும் முத்தரசன் குட்டையில் நிறுத்தப்படுகின்றன. கோழி எருவில் இருக்கும் சிறு வண்டுகள் லாரியிலிருந்து ஊர்ந்து ரோட்டோர குடியிருப்புகளுக்குள் முகாமிடுகின்றன. இதனால் ரோட்டோரத்தில் கோழி எரு மற்றும் மற்ற லாரிகளை நிறுத்தக்கூடாது என்று அப்பகுதி மக்கள் பலமுறை லாரி டிரைவர்களிடம் கூறியுள்ளனர். ஆனாலும் அந்தப் பகுதியில் லாரிகளை நிறுத்துவது தொடர்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கோழி எரு ஏற்றுக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் முத்தரசன் குட்டை பகுதியில் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். லாரியிலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வண்டுகள் அங்கிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. தரையில் தூங்கியவர்கள் பதறி எழுந்தனர். நூற்றுக்கணக்கான சிறு வண்டுகள் வீட்டை சுற்றி ஊர்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வண்டுகளை கூட்டி பெருக்கி வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கே நிறுத்தப்பட்டிருந்த லாரியை சிறை பிடித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளி திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் தலைமையிலான போலீசார், என்ன மங்கலம் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, முத்தரசன் குட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீப காலமாக எங்கள் பகுதியில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் லாரிகள் நிறுத்திவிட்டு டிரைவர்கள் தூங்குகின்றனர். அந்த லாரிகளிலிருந்து வெளியேறும் சிறு வண்டுகள் எங்கள் வீட்டுக்குள் புகுந்து நாங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எங்கள் பகுதியில் லாரியை நிறுத்தக்கூடாது என்று ஏற்கனவே பலமுறை கூறியும் அதை மீறி லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சிறு வாண்டுகள் வீட்டுக்குள் புகுந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இந்த பகுதியில் இனி லாரிகள் நிறுத்தப்பட மாட்டாது என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டங்களை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Next Story