
X

சென்னை அண்ணாநகரில் ரூ.5 கோடி கடன் தொல்லையால், மருத்துவர் அவரது மனைவி மற்றும் அவர்களுடைய 2 மகன்கள் உட்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (53). இவர் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். கொளத்தூரில் இவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. சென்னை அண்ணா நகரில் இரண்டு ஸ்கேன் சென்டர், செங்குன்றத்தில் இரண்டு ஸ்கேன் சென்டர் என நான்கு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினார். இவரது மனைவி சுமதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். குடும்ப வேலைப் பளுவால் சமீபகாலமாக நீதிமன்றத்துக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த தம்பதியின் மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் (19). பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார்( 17 ) அண்ணா நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டு வேலைக்கார பெண்மணி ரேவதி, வழக்கம்போல் இன்று (மார்ச் 13) காலை மருத்துவர் பாலமுருகனின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை போன் செய்தும் மருத்துவர் மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து டாக்டரின் டிரைவர் விஜய்க்கு ரேவதி தகவல் தெரிவித்தார். வீட்டு வேலைக்கார பெண் ரேவதி, டாக்டரின் டிரைவர் விஜய், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஜெயராமன் மூன்று பேரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். சுமதியும் மூத்த மகன் ஜஸ்வந்த் குமாரும் ஒரு அறையில் உள்ள மின்விசிறிகளில் தனித்தனியாக தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மருத்துவர் பாலமுருகன் மற்றொரு அறையிலும், சிறிய மகன் லிங்கேஷ்குமார் பூஜை அறையிலும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்கேன் சென்டர் தொழிலை விரிவாக்க 5 கோடி ரூபாய் வரை வங்கிகளில் மருத்துவர் பாலமுருகன் கடன் பெற்றுள்ளார். இதற்காக, மாதம் 6 லட்சம் ரூபாய் வரை EMI செலுத்தி வந்ததும் தெரிய வந்ததுள்ளது. இதுதவிர பாலமுருகன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரிடமும் தொழில் விருத்திக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கேன் சென்டர் தொழில் நடக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மருத்துவர் பாலமுருகன் தவித்து வந்துள்ளார். மனைவி சுமதியிடமும் இதுகுறித்து கூறி பலமுறை புலம்பி அழுதுள்ளார். இந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வியாழக்கிழமை இரவு உணவுக்குப் பின், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலமுருகனை பார்க்க, அவரது வீட்டுக்கு பலர் வந்து போவதுண்டு. அந்த வகையில் கடன் கொடுத்தவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்து மிரட்டி விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் மருத்துவர் பாலமுருகனை யார் யார் வந்து வீட்டில் சந்தித்தார்கள்? என்பதை அறிவதற்காக குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, மருத்துவர் பாலமுருகன் வழக்கம் போல் பேசினாரா? அவரது செயல்களில் ஏதாவது மாற்றம் இருந்ததா? என்பது குறித்து, வேலைக்கார பெண், கார் டிரைவர் ஆகியோரிடமும் திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story