X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப்பகுதி செவல் விளை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 35) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு ஸ்ரீ (வயது 10), பூரண செல்வி (வயது 7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி செல்வி திடீரென்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சமல்வி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. செல்வி இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலையில் செல்வியின் கணவர் முருகன் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து, குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி செல்வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும் அதில் அவர் இறந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நீதிபதி பொன்பாண்டியன் முருகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story