மோசடி

X
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பின் சார்பாக ஈரோடு மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால் எங்களது ரத்ததான கூட்டமைப்பின் மூலமாக இலவசமாக ரத்த தானம் செய்து வருகிறோம். ரத்த தானம் செய்வது தொடர்பாக நாங்கள் வாட்ஸ் -அப் குழு உருவாக்கி அதில் ரத்த தானம் செய்ய ஆர்வம் உள்ளவர்களை இணைத்து அதன் மூலம் ரத்தம் தேவைப்படும் தகவல்களை பகிர்ந்து ரத்ததானம் செய்ய முன்வரும் தன்னார்வலர்களை கொண்டு ரத்த தானம் செய்து பல மக்களுக்கு உதவி செய்து வருகிறோம். மேலும் ரத்தம் தேவைப்படும் தகவல்களை நாங்கள் வாட்ஸ் அப்பில் பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்து அதன் மூலமும் தன்னார்வலர்களைக் கொண்டு ரத்ததானம் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது கூட்டமைப்பு சார்பாக ரத்தம் தேவைப்படும் தகவல்களை வாட்ஸ் அப்பில் பகிரும் போது 2 செல்போன்களிலிருந்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் எங்கள் வாட்ஸ் அப் குழுவில் உள்ள பயனாளர்களின் தொடர்பு எண்களை எடுத்து அவர்களிடம் தொலைபேசி மூலமாக பேசி ரத்த தானம் செய்ய வருவதற்கு போக்குவரத்து மற்றும் உணவிற்கும் மட்டும் ஆயிரம் முதல் 2000 வரை வேண்டுமென்று கூறி ஜிப்பே, போன் பே மூலமாக பணத்தை வாங்கிக் கொண்டு ரத்த தானம் செய்யாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பண மோசடி ஏற்படுவது மட்டுமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே ஏமாற்றி வரும் மோசடி கும்பலை சேர்ந்த மொபைல் எண்களை வைத்திருக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

