மோசடி

X
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் பச்சாக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் வசிக்கும் கணவன் - மனைவி இருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். அவர்கள் எங்கள் ஊர் பொதுமக்கள் சிலரிடம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும், மேலும் டெபாசிட் செய்தால் கூடுதலாக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்கள். அவர்களது பேச்சை நம்பி எங்க ஊரைச் சேர்ந்த சிலர் ரூ. 2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை என அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். சுமார் 10 -க்கும் மேற்பட்ட மக்கள் அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்தனர். இந்நிலையில் டெபாசிட் தொகைகள் முதிர்வடைந்து வட்டியுடன் பணத்தை திருப்பிக் கேட்டபோது மேற்படி கணவன் மனைவி இருவரும் காலம் தாழ்த்தி வந்தனர். நாங்கள் பலமுறை அவர்களிடம் பணத்தை கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி பணம் தர மறுத்து வருகின்றனர். எனவே எங்களிடம் ஆசை வார்த்தை கூறி பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி இருவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Next Story

