எச்சரிக்கை

எச்சரிக்கை
X
கடம்பூர் அருகே மலைப்பாதையில் சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக உணவு தண்ணீரை தேடி அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உலா வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதை மிகவும் குறுகலாக இருக்கும் பாதையாகும். இங்கு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். அந்த ஒற்றை யானை நீண்ட நேரமாக சாலை விட்டு நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. பின்னர் அரை மணி நேரம் கழித்து அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் அந்த பகுதியை விட்டு கடந்து சென்றனர்.இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு தண்ணீர் தேடி சாலையோரம் வருவது தொடர் கதையாகி உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். விலங்குகளை போட்டோ எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story