புகார்

X
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த வேம்மாண்டம்பாளையம் கரட்டுப்பாளையம் அருகில் கரடி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் 5 கார்களில் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்பொழுது வாலியூர் என்ற இடத்தில் போதையில் காரை ஓட்டிய நபர் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளார் இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நபர்கள் காரில் வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காரில் வந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மிரட்டி ரூ. 5 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரில் வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதைத் தொடர்ந்து மது போதையில் இருந்து நபர் அவசர அவசரமாக காரை பின்னோக்கி வேகமாக இயக்கியுள்ளார் அப்பொழுது காரின் பின்னால் நின்ற பெண்ணின் மீது மோதும்படி சென்றதால் பொதுமக்கள் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த போதை நபர் செல்போனில் மற்ற கார்களில் வந்தவர்களை அழைத்துள்ளார். காரில் வந்த 30-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அங்கு வந்தனர். கிராம மக்கள் வருவதை அறிந்த காரில் வந்த நபர்கள் உடனடியாக தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பி சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி 200 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நம்பியூர் புளியம்பட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களை கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். தாக்குதல் நடத்திய நபர்கள் மீண்டும் அப்பகுதிக்கு வருவோம் என தெரிவித்து சென்றதால் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கிராம மக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.தாக்குதலில் காயமடைந்தவர்கள் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரப்பாளையம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் திரண்டு சென்று புகார் அளித்தனர்.அதில் கரடி கோவில் கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவும் அடர்ந்த காட்டு பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் வாலிபர்கள் மது அருந்திவிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்களிடமும் ரகளையில் ஈடுபடுகின்றனர். கோவிலை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Next Story

