X
சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தியின் இல்லத்துக்குச் சென்று அங்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நேற்றிரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அமித் ஷா, இன்று (ஏப்.11) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டுக்குச் சென்றார். தமிழிசையின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் கடநத 9-ம் தேதி மறைந்ததை அடுத்து அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜனனின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர், மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக உடனான கூட்டணி தொடர்பாகவும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Next Story