
X
திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் போர்டு நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வில் ஒரு தரப்பினர் தங்களை அனுமதிக்கவில்லை என புகார்; தேர்தல் நடத்தாமல் உறுப்பினர்களை நியமனம் செய்வதாக புகார் தெரிவித்து ஜமாத் முன்பு கூடியதால் பரபரப்பு; பதட்டம் காரணமாக போலீசார் குவிப்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் போர்டு நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி நடைபெற்றது. வீரசோழன் ஜமாத் வளாகத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூடிய நிலையில் இந்த நிர்வாகிகள் தேர்வில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என அதே ஊரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். மேலும் இந்த நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் நிர்வாகிகள் தேர்வு முறையாக தேர்தல் வைத்து நடத்தாமல் நியமனம் செய்யப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது இந்த தேர்தல் பார்வையாளர் புகார் தெரிவித்த தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜமாத்தார்கள் அனுமதித்தால் மட்டுமே தங்களை உள்ளே அனுமதிக்க முடியும் என அவர் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. நாங்களும் இது ஊரைச் சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கும் இங்குதான் ஆதார் கார்டு உள்ளது எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பினர். நாங்கள் பிரச்சனை செய்ய வரவில்லை எனவும் தங்களை உள்ளே அனுமதிக்க மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்ததால் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதித் தரும்படி தேர்தல் பார்வையாளர் கேட்டுக்கொண்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை அடுத்து தங்கள் புகாரை கோரிக்கை மனுவாக எழுதி தேர்தல் பார்வையாளரிடம் வழங்கினர். மேலும் பதட்டம் காரணமாக திருச்சுழி டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக வீரசோழன் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story

