நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்திரைத் திருவிழா துவக்கம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா ஏப்.14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
சித்திரை திருவிழாவில் தினமும் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில்வாகனம், ரிஷப வாகனம், என பல்வேறு வாகனங்களில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை உடன் சாமி வீதி உலா நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. தேரோட்டத் தினத்தில் அதிகாலை முதலே பால் காவடி, பன்னீர் காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
பேராவூரணி மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், மேலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேரோட்ட தினத்திற்கு வந்து செல்வது வழக்கம். தொடர்ந்து 23ஆம் தேதி தீர்த்தமும், 24ஆம் தேதி காலை திருக்கல்யாணமும் இரவு தெப்ப உற்சவமும், 25ஆம் தேதி விடையாற்றி உற்சவமும், மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்ற விழாவில் பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார், கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், பரம்பரை அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் மற்றும் ஏராளமான முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.