படுகர் இன மக்களுடன் நீலகிரி அ.தி.மு.க., வேட்பாளர் நடனம்!
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச் செல்வன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஊட்டி அருகே உள்ள படுகர் இன மக்கள் வசிக்கக்கூடிய நுந்தளா மலை கிராமத்தில் அ.தி.மு.க.,வினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட நுந்தளா கிராமத்திற்கு சென்ற அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனுக்கு படுகரின மக்கள் தங்கள் பாரம்பரிய கலாசார உடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து கிராமப் பகுதியில் அமைந்துள்ள படுகரின மக்கள் குலதெய்வமான ஈரமாசி ஹெத்தை அம்மன் கோவிலில் அம்மனை தரிசித்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காணிக்கை செலுத்தி வழிபட்டார். மேலும் வாக்கு படுகரின மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய கலாசார உடையுடன் உற்சாகமாக நடனமாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "படுகரின மொழியில் வணக்கம் தெரிவித்தபடி இங்கு இரண்டு முறை வெற்றி பெற்ற தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் ஆ,ராசா மக்களின் குறைகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் இந்து மக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். இதனால் வரும் தேர்தலில் மக்கள் சிந்தித்து தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தனக்கு வாக்களிக்க வேண்டும். பசுந்தேயிலை விலை உள்பட நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.