நீலகிரி டாக்சி டிரைவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
மனு அளிக்க வந்த டாக்சி டிரைவர்கள்
நீலகிரி இளைஞர் சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவையில் இயங்கும் பல்வேறு தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதால் இங்குள்ள உள்ளூர் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையடுத்து கடந்த ஆண்டு எங்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்படி கோவையிலிருந்து நீலகிரி வரும் தனியார் வாகனங்கள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து திரும்ப செல்லும்போது பயணிகளை ஏற்றிச் செல்ல கூடாது. பயணிகளை இறக்கி விட்டவுடன் உடனடியாக கோவை திரும்பி விட வேண்டும். பயணிகளை அழைத்து வந்து, அதே பயணிகளுடன் மீண்டும் திரும்பும் வாகனங்கள் கண்டிப்பாக முன்பதிவு அடையாள எண்ணை முன்பக்க கண்ணாடியில் ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் முன்பதிவு அடையாள எண் இல்லாமல் வரும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முன்பதிவு அடையாள எண் குறித்து அறிந்து கொள்ள தனியாக வாட்சப் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தனியார் டாக்சி நிறுவன மேலாளர்கள், நீலகிரி டிரைவர்கள், போக்குவரத்து துறை, போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இதன்படி தனியார் நிறுவன வாகனங்கள் கோவையில் இருந்து கிளம்பு முன்னர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தவுடன், அதற்கான அடையாள தகவல்களை உடனே பதிவேற்றம் செய்யவும் அடையாள தகவல்கள் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த வாட்சப் குழுவில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விதிகளை இதுவரை நீலகிரி மாவட்ட டிரைவர்கள் கடைபிடித்து வந்தோம். ஆனால் தனியார் நிறுவன டாக்சி நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை. இதற்கு முன்னர் நீலகிரி வந்து பயணிகளுடன் திரும்பும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் சுமார் 20 எண்ணிக்கையில் வருவதாக கூறப்பட்டது. தற்போது 100-க்கும் அதிகமான வாகனங்கள் வருகின்றன. இதுகுறித்து தனியார் நிறுவன டிரைவர்களிடம் கேட்டால் அவர்கள் நீலகிரி மாவட்ட டிரைவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை மீது அவதூறு பரப்புகிறார்கள்.
கடந்த 21-ம் தேதி கோவை விமான நிலைய நுழைவு வாயிலில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்ற நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனத்தை, தனியார் நிறுவன டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசினர். எனவே நீலகிரி மாவட்ட டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதிமுறைகளை அனைத்து தரப்பினரும் சரியாக கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.