நீலகிரி; 100 சதவீத வாக்குப்பதிவு பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு!
விழிப்புணர்வு
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும்வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செல்பி பாயிண்ட் அமைத்தல், துண்டு பிரசுரம் வழங்குதல், விழிப்புணர்வு பேரணி செல்தல் கியாஸ் சிலிண்டர்களில், வாக்களிப்பதன் அவசியம் வலியுறுத்தி துண்டு பிரசுரம் ஒட்டுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊட்டி எமரால்டு அருகே உள்ள முள்ளிமந்து தோடர் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தோடர் கிராம மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடினர். இசை நாற்காலி உள்பட பல்வேறு விளையாட்டுகள் நடந்தது. தோடர் கிராம மக்கள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலரும் ஆவின் பொது மேலாளருமான ஜெயராமன் செய்திருந்தார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஷோபனா, உதவி திட்ட அலுவலர் ஜெயராணி, சமூக ஆர்வலர் சக்தி சுரேஷ் ரமணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.