நீலகிரி பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன்

எல். முருகன்
நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியை பா.ஜ.க., தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அதில் நீலகிரி (தனி) தொகுதிக்கான பா.ஜ.க., வேட்பாளராக, சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தில் லோகநாதன், வருடம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தவர், எல்.முருகன் 46. சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் (எல்.எல்.எம்.,) முனைவர் பட்டம் பெற்றவர்.
ஆரம்ப காலத்தில் பா.ஜ.க.,வின் அடிப்படை பொறுப்புகள் வகித்த எல்.முருகன், 2017 ம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர், 2020ம் ஆண்டு தமிழக பா.ஜ.க., தலைவர் என அடுத்தடுத்த உயர் பொறுப்புகளை பெற்றார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக உள்ளார்.
அண்மையில் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்ததால், பா.ஜ.க., சார்பில் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பில்லை என கட்சியினர் நினைத்துவந்த நிலையில், பா.ஜ.க., தலைமை அவரது பெயரை அறிவித்திருப்பது கட்சியனரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனால் ஸ்டார் தொகுதி பட்டியலில் நீலகிரியும் இணைந்துள்ளது.
முருகன் கடந்த 2011 ராசிபுரம் சட்டமன்றத் தேர்தல், 2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தல், தாராபுரம் சட்டமன்ற தேர்தல் என மூன்று தேர்தல்களிலும் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
