காட்டு மாடு வேட்டை - காங்கிரஸ் பிரமுகர் கைது
தமிழகத்தில் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டுமாடு என பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக இந்த வனப்பகுதி உள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலை ஓரங்களில் காட்டுமாடுகளை காணமுடிந்தது.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி அன்று குந்தா வனச்சரகம், குன்னூர் அருகே காட்டேரி அணை அருகே காட்டுமாடு ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு வேட்டையாடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக சென்ற கார்களில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
வனத்துறையினர் மற்றும் போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த வேட்டை கும்பல் கேரளா, கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் ஆங்காங்கே பதுங்கினர். தொடர்ந்து கண்காணித்த தனிப்படையினர் கடந்த டிசம்பர் 6ம் தேதி கூடலூரை சேர்ந்த சிபு, சத்தீஷ், சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. அதாவது கூடலூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரும் ஓவேலி பேரூராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலருமான மண்டபத்தில் ஷாஜி, 52 என்பவர் வேட்டை கும்பலுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்ததும் காட்டு மாடுகளை தொடர்ந்து வேட்டையாடி அதன் இறைச்சியை விற்ற கும்பலில் மண்டபத்தில் ஷாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு 48, கேபி ஜூலெட் 35, குட்டன் என்கிற குட்டி கிருஷ்ணன் 44, ஜோஸ் குட்டி 39 ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
மண்டபத்தில் ஷாஜி உள்ளிட்ட 5 பேரையும் பிடிக்க வனத்துறையினர் முயன்றபோது அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். ஆனாலும் தனிப்படையினர் இவர்களை பிடிக்க கோவையில் 3 முறையும், கூடலூரில் 2 முறையும் முயன்ற போதும் பிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் செய்வது அறியாமல் இவர்கள் 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால் முன் ஜாமின் கிடைக்காததால் மண்டபத்தில் ஷாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு, கேபி ஜுலெட், குட்டி கிருஷ்ணன், ஜோஸ் குட்டி ஆகிய 4 பேரும் கடந்த 7ம் தேதி ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் மூளையாக செயல்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மண்டபத்தில் ஷாஜி மட்டும் தலை மறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மண்டபத்தில் ஷாஜி ஊட்டிக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் வாகனத்தில் வந்த மண்டபத்தில் ஷாஜியை தனிப்படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து, ஊட்டியில் உள்ள நீலகிரி வன கோட்ட அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். மண்டபத்தில் ஷாஜி கைது குறித்து தகவல் அறிந்து அங்கு செய்து சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்ற போது மண்டபத்தில் ஷாஜியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அழைத்து வரப்பட்டார். அப்போது வனத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்த மண்டபத்தில் ஷாஜியின் ஆதரவாளர் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதுடன் மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் செய்தி சேகரிக்கவும் இடையூறு செய்தார். அவரை எச்சரித்த வனத்துறையினர் அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.