பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து - மாணவர்கள் காயம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சணக்கொரை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து, பள்ளி வாகனம் மூலம் மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பள்ளி வாகனம் காத்தாடிமட்டம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி, பள்ளி வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த ஷம்ஷிகா 14, சம்ஷிகா 12, யாசினி 14, தனூஜ் 13, ஹர்சிகா 17, மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர் சுரேஷ் 32, ஆகியோர் காயமடைந்தனர். மேலும் பள்ளி வாகனமும் சேதமடைந்தது.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஹர்சிகா என்ற மாணவிக்கு தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டு உள்ளது. தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து லவ்டேல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து சப் இன்ஸ்பெக்டர் விஸ்வேஸ்வரன் தலைமையிலான போலீஸார், ஓட்டுநர் சந்துருவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.