வாரிசு அரசியல் கொண்ட கட்சிகளோடு கூட்டணி இல்லை - பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க பாஜக குறித்து மக்களிடம் கருத்து கேட்பு முகாம்.

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க, வலிமையான பாரதம்- வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, பாஜக சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் கருத்து கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மக்கள் கருத்து கேட்பு முகாமை ராசிபுரத்தில் தொடங்கி வைத்து பாஜக மாநில துணைத்தலைவர் Dr. K.P. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜக சார்பில், நடைபெற்ற மக்கள் கருத்து கேட்கும் முகாமினை புதிய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் / பெருங்கோட்ட பொறுப்பாளர் Dr. கே. பி. இராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

முகாமில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இம்முகாமில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் எழுதி போட்டு வருகின்றனர். நமது நாடு மேலும் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்கள், கருத்துக்கள் பாஜக ஆட்சியின் செயல்பாடுகள், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளிட்டவை பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வடிவில் கருத்து பெறப்படுகிறது.

பெறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பெட்டியில் சேகரிக்கப்படுகின்றன. முன்னதாக, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜக மாநில துணைத்தலைவர் K.P. இராமலிங்கம் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துகள் தெரிவித்துக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம், ”பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழகத்தில் பொது மக்களிடம் இதுபோன்ற கருத்து கேட்கும் முகாம்கள் இன்று முதல் வருகின்ற 20-ம் தேதி வரை பாஜக சார்பில் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் முதலாவதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் கருத்துகள் அடங்கிய சுமார் ஒரு கோடி மனுக்கள் பெறப்பட்டு, பிரதமரிடம் சேர்க்கப்படும். அதன் அடிப்படையில் பிரதமர் தமிழக மக்களின் எண்ணங்களை மேலும் அறிந்து கொள்ள முடியும். வலிமையான பாரதம், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உத்தரவாதத்தை பிரதமர் அளித்துள்ளார். பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை இந்தப் பெட்டியில் போடலாம். நான், இதுவரை அரசு பணியில் இல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்து மத்திய மாநில அரசு பணிகளை வழங்க வேண்டும் என்று இந்த மனுவின் மூலம் பிரதம மந்திரியை கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு நேரடியாக சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, டாஸ்மாக் சாராயம், போதை பொருள்கள் புழங்கும் மாநிலமாக உள்ளது. இங்கிருந்து தான் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. பேரறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் முதலமைச்சராக இருந்தபோது திமுகவில் அயலக அணி என்பது இல்லை.

ஆனால் இப்போது போதைப் பொருளை கடத்துவதற்காகவே அக்கட்சி அயலக அணியை அமைத்துள்ளதாக டாக்டர் கே.பி. இராமலிங்கம் குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு, தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் பணத்தை திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக செலுத்துகிறது. இதில் ஊழல் செய்ய முடியாது என்பதால்தான் மாநில திமுக அரசு போதை பொருள் கடத்தலுக்கு துணையாக நின்று முறைகேடாக பணம் சம்பாதிக்கிறது. இதைக் கொண்டுதான் வருகின்ற தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். போதைப் பொருள் விவகாரத்தை திசை திருப்பவே திமுக பல்வேறு நாடகங்களை நடத்துகிறது. தமிழக முதல்வரின் மாயவரம் பேச்சும் அப்படித்தான் உள்ளது. மாநில உரிமை பேசும் திமுகவுக்கு எதற்காக அயலக அணி இருக்க வேண்டும் என்ன கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராமலிங்கம், வாரிசு அரசியல் கொண்ட கட்சிகளோடு கூட்டணி இல்லை. நாட்டு நலனுக்காக மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். பாரதிய ஜனதா கட்சிக்கு அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். தாமரை சின்னத்தில் போட்டியிட இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம். அது போலத்தான் ஐஜேகே கட்சியும் நமது கூட்டணியில் உள்ளது. பிரதமர் கேஸ் இணைப்புக்கு 100 ரூபாய் குறைத்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம், தேர்தலுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால், மாநில அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு VAT வரியை குறைப்பதாக கூறியது. இப்போது தேர்தலை காரணம் காட்டியாவது அதனை அறிவிக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர் N.P. சத்தியமூர்த்தி,நகர் தலைவர் பி.வேலு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகேந்திரன், மாவட்ட மாநில நிர்வாகிகள் சேதுராமன், சித்ரா, முத்துசாமி, தமிழரசு, சதீஷ் சீனிவாசன், காசி, அசோக், கனகராஜ், ஏழுமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story