மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சமரசம் செய்யும் திமுக மேலிடம்
மேயர் மகாலட்சுமி
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 51 வார்டுகளில், 33 பேர் தி.மு.க.,வும், எட்டு பேர் அ.தி.மு.க.,வும், எட்டு பேர் சுயேட்சையாகவும், ஒருவர் காங்கிரஸ், ஒருவர் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றனர். மேயராக 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியும், 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குமரகுருநாதன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
நெருக்கடி மேயராக பதவியேற்ற மகாலட்சுமிக்கு, ஒராண்டாகவே அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் கணவர் யுவராஜ் ஆதிக்கமும் அதிகமானதால், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதற்கிடையே, மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் கமிஷன் வரவில்லை என கவுன்சிலர்கள் பலரும் மறைமுகமாக பிரச்னை செய்தனர். பல பிரச்னைகள் நீடித்து வந்த நிலையில், மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க.,- - அ.தி.மு.க., - சுயேட்சை கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தனர். இதனால், தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல், மேயருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.