கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வரவில்லை!
நெல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் NCCF மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 34 நாட்கள் ஆகியும், விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல் உள்ளதால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். விவசாயம் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு பருவங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது.
சம்பா பருவத்தில் சுமார் 32,000 ஏக்கரும் , நவரைப் பருவத்தில் 52 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் நெல் பயிரிடப்பட்டு கடந்த மார்ச் முதல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அறுவடை காலம் வந்த நிலையில் , நெல் அறுவடை செய்வதற்கு முன்பே மத்திய மற்றும் மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்யலாம் என அனுமதி வழங்கப்படும்.
அதனைத் தொடர்ந்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினர் கிராமங்களில் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க இடங்களை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்குவர். அவ்வகையில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் சார்பாகவும், அதே போன்று தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையும் வாயிலாகவும் இரு வகையான நேரடி மேற்கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
அவ்வகையில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்கள் பட்டா வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளை சமர்ப்பித்து கொள்முதல் செய்ய கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசு சார்பில் அதற்கான பணம் அவர்களின் வங்கி கணக்கில் குறைந்த கால அவகாசத்தில் செலுத்தப்படும்.
ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் இறுதியில் தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையும் வாயிலாக அமைக்கப்பட்ட பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இதுவரை 34 நாட்கள் ஆகியும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
அவ்வகையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வந்த இந்த மையம் சார்பில், கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட 2600 மூட்டைகளுக்கு இதுவரை பணம் செலுத்தவில்லை. இதனால் 23க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் பெற முடியாமல், நடப்பு விவசாயத்துக்கு பணம் செலவழிப்பதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக விவசாயிகளுக்கு பணம் பெறுவதற்கு உரிய ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.