இனி தப்பே நடக்காது: நியாய விலை கடைகளுக்கு மேம்படுத்தப்பட்ட இயந்திரம்

இனி தப்பே நடக்காது: நியாய விலை கடைகளுக்கு மேம்படுத்தப்பட்ட இயந்திரம்
X

புதிதாக வழங்கப்பட்டுள்ள இயந்திரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முழு நேர நியாய விலை கடைகளுக்கு, கருவிழி பதிவுகள் மற்றும் விற்பனை ரசீது வழங்கக்கூடிய புதிய இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு கூட்டுறவு துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பில் நியாய விலை கடைகள் மூலம் இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், பொருட்களைப் பெற ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் வாழ்ந்து கைரேகை பதிவு செய்யப்பட்டு உரிய நபர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு,

அதற்கான குறுஞ்செய்தியும் அவர்களது அலைபேசிக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கைரேகை பதிவு சில நேரங்களில் இணையதள குறைபாடு காரணமாக பதிவு மேற்கொள்ள இயலாத நிலையில் அதனை மேம்படுத்த வேண்டும் என நியாய விலை கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்ததின் பேரில், தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளர் கைரேகை பதிவு செய்ய இயலாத நேரத்தில் நேரத்தில் கருவிழி பதிவு மூலம் மேற்கொள்ளவும், பொருட்கள் பெறப்பட்டதற்கான ரசீதுகள் இயந்திரத்தின் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 338 முழு நேர நியாய விலை கடைகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய விற்பனை இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, விற்பனையாளர்களிடம் வழங்கினார். மேலும் இந்த புதிய இயந்திரத்தை கையாளும் முறை குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

இதில் குடும்ப அட்டை மூலம் பொது மக்களுக்கு எவ்வாறு பொருட்கள் வழங்குவது என்பதும் செயல்முறையில் எடுத்துக் காட்டப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தாங்கள் பெறும் பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரத்தின் மூலம் அளிக்கப்படும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, கூட்டுறவுத்துறை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story