இன்று வேட்புமனு தாக்கல் எதுவும் இல்லை!
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில், வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாகவும் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியும் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் மற்றும் வளாகம் முழுவதும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு முழு பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும், மற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுவார்கள். வாகனங்களும் 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படும். 100 மீட்டர் தூரத்தை குறிக்கும் வகையில் சாலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டு உள்ளது. மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவில் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் மெட்டல் டிடெக்டர் வைத்து உள்ளே வரும் அனைவரும் சோதனைக்கு பின்னரே ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முதல் நாளான இன்று வேட்பாளர்கள் யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதுவரை தி.மு.க., நாம் தமிழர் உள்பட 6 வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுக்கள் வாங்கி உள்ளனர். இவர்கள் அடுத்த ஓரிரு நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.