சாலை வசதி இல்லை: வீடு எரிந்து நாசம்
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி அருகே அப்பராசபுரம் புத்தூரில் உள்ள காலனி தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் , மின்சாரம் , சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் செங்கோடன், என்பவரது கூரை வீடு இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
அப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் தீயணைப்பு வாகனம் வீடு எறிந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் வீடு முற்றிலுமாக ஏறிந்து நாசமாகியது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை டு நாகை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஒரு மணி நேரம் சாலை மறியல் நீடித்ததால் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மற்றும் பொரையார் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.