நாமக்கல் மாவட்டத்தில் பாலங்கள் பராமரிக்கும் பணி கள ஆய்வு!
பாலங்கள் பராமரிக்கும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும்பாலான பாலங்கள் கால்வாய்கள் நிரம்பி நீர்வெளியேறுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் கடந்த வாரம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பாலங்களையும் மழை நீர் செல்வதற்கு ஏதுவாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் பற்றும் பராமரிப்பு அலகின் மூலம் பாலங்கள் பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நாமக்கல் முதல் துறையூர் செல்லும் நெடுஞ்சாலை தூசூர், பொன்னேரி, எருமப்பட்டி, பவித்திரம் போன்ற பகுதிகளில் உள்ள பாலங்களில் அடைப்பு ஏற்படா வண்ணம் பாலங்கள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை இன்று சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் திரு.சி. சசிக்குமார் அவர்கள் நேரில் பாரவையிட்டு பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மழை நீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதை தவிர்த்து, மாநில மாவட்ட சாலைகளில் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது உதவிக்கோட்டப்பொறியாளர் இரா.சுரேஷ்குமார் மற்றும் அ.க.பிரனேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.