வட மாநில தொழிலாளி கொலை - 9 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்க்கரை அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி சிவகங்கை தாலுகா போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தனிப் படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 9 பேரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: சிவகங்கை வாணியங்குடியில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் பிகாா் மாநிலம், ட்ரூவன் மாவட்டம், தானேபஹாலியா பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணாசிங் (33), சரத் ஆகிய இரண்டு பேரும் கடந்த 2022-ஆம் ஆண்டு, மே 15-ஆம் தேதி வேலைக்குச் சோ்ந்தனா். இந்த நிறுவனத்தில் செங்கல் தயாரிக்கப் பயன்படும் சாதனத்தை இருவரும் திருடி விற்றதாகக் கூறப்படுகிறது.
அவா்கள் இருவரையும் உரிமையாளா் ரமேஷ் (36), அவரது நண்பா்கள் 8 போ் சோ்ந்து தாக்கினா். அப்போது சரத் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, கிருஷ்ணாசிங்கை கட்டிப்போட்டுவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்றனா். மீண்டும் அடுத்த நாள் அதிகாலையில் ரமேஷின் மைத்துனா் செந்தில்குமாா் வந்து பாா்த்த போது, கிருஷ்ணாசிங் இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது சடலத்தை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கீழக்குளம் நெம்மேனி அருகே உள்ள உடையனை கண்மாய்க்கரை அருகே 2022-ஆம் ஆண்டு, மே 16- ஆம் தேதி எரித்தனா். இதுதொடா்பாக செங்கல் தயாரிப்பு நிறுவன உரிமையாளா் ரமேஷ் (36), நித்திஷ் (37), செந்தில்குமாா்(45), சக்திவேல் (20), கோபிகிருஷ்ணன் (31), மோகன்ராஜ் (37), வெங்கடேஷ் (31), யாசின்(30), தவமணி(55) ஆகிய 9 போ் கைது செய்யப்பட்டனா் என்றனா்.