வடகிழக்கு பருவமழை தீவிரம் - மயிலாடுதுறையில் அமைச்சர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில், மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கனமழை நீடிக்கும் மாவட்டங்களில், அமைச்சர்கள் நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், சேதங்கள் குறித்தும்,பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும், என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், மெய்யநாதன், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடி தாலுகா, தலச்சங்காடு கிராமத்தில், நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, மாற்றுச்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, காளியம்மன் கோவில் தெருவில், மழை பாதிப்பு ஏதேனும் உள்ளதா என பொதுமக்களை நேரில் சந்தித்து, குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டு' பொதுமக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையருமான அமுதவள்ளி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோரிடம்,கேட்டறிந்து,பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டும், என்று அறிவுறுத்தினார். அப்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், செ. இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, ஆகியோர் உடன் இருந்தனர்.