பயிற்சியில் பங்கேற்காத 795 அலுவலர்களுக்கு நோட்டீஸ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கடந்தவாரம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 9 ஆயிரத்து 781 பேருக்கு ஆணை அனுப்பப்பட்டது.
இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் 1,949 பேருக்கும், வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-1 1,949 பேருக்கும், வாக்குச்சாவடி அலுவலர்நிலை-2 1949 பேருக்கும், வாக்குச்சாவடிஅலுவலர் நிலை-III 1,949 பேருக்கும், வாக்குச்சாவடிஅலுவலர் நிலை- IV 238 பேருக்கும் மற்றும் மாற்று அலுவலர்களாக 1,988 பேருக்கும் ஆணை அனுப்பப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 795 அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பயிற்சியில் பங்கேற்காத 795 பேருக்கும், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் -1951 பிரிவு 134-ன்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என்று விளக்கம் கேட்டு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விளக்கம் கேட்டு, குறிப்பாணை (நோட்டீஸ் ) அனுப்பி உள்ளார். இந்த குறிப்பாணை குறித்து எழுத்து பூர்வமாக விளக்கத்தை 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.