நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் செவ்வாய்க்கிழமை விளார் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றனர். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ந. கிருஷ்ணகுமார், மணி செந்தில் உள்பட 4 பேருடன் வேட்பாளர் எம்.ஐ. ஹூமாயூன் கபீர் வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார். மருத்துவமனையிலிருந்து....: வேட்பாளர் ஹூமாயூன் கபீர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இரு நாள்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு குளூகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, மருத்துவரின் ஆலோசனை பெற்று, குளூகோஸ் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் வென்பிளான் என்கிற ஊசி பொருத்தப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று தொடர் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். இதுவரை 12 பேர்: மேலும், நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக முகமது யூசுப் வேட்பு மனு தாக்கல் செய்தார். தவிர, தேசிய மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் கி.நா. பனசை அரங்கன், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சமூக நீதி கூட்டமைப்புத் தலைவர் சி. ரெங்கசாமி, சுயேச்சை வேட்பாளர்களாக பட்டுக்கோட்டை அருகே செம்பாலூரைச் சேர்ந்த பி.ஆர். சதீஷ்குமார், வெட்டிக்காடைச் சேர்ந்த ஏ. சங்கர், தஞ்சாவூர் விளார் சாலை அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த எஸ். கரிகாலசோழன், தஞ்சாவூர் அருகே மாத்தூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த எஸ். அர்ஜூன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் திங்கள்கிழமை 4 பேரும், செவ்வாய்க்கிழமை 8 பேர் என மொத்தம் 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story