முகலிவாக்கம் பூங்கா முகப்பில் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்'அமைக்க எதிர்ப்பு

முகலிவாக்கம் பூங்கா முகப்பில் பாதாள சாக்கடை மேன்ஹோல்அமைக்க எதிர்ப்பு
மேன்ஹோல் அமைக்க எதிர்ப்பு
முகலிவாக்கம் பூங்கா முகப்பில் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்ட போது, முகலிவாக்கம் ஊராட்சி சேர்க்கப்பட்டது. அங்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின், 2019 ஜூலை மாதம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவக்கப்பட்டன.

இதற்காக, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 77.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 52 கி.மீ., வரை கழிவுநீர் குழாய்கள் புதைக்கப்பட்டு, 2,128 'மேன்ஹோல்' அமைக்கப்படுகின்றன. மேலும், 7,300 மீ., விசை குழாய் அமைக்கப்படுகிறது. சந்தோஷ் நகர், ராமச்சந்திரன் தெரு, எஸ்.எஸ்.கோவில் தெரு ஆகியவற்றில் இரு கழிவு நீரிறைக்கும் நிலையம் அமைந்துள்ளது.

இத்திட்டம் வாயிலாக, 5,800 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 40,000 பேர் பயனடைவர். தற்போது, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், ஏ.ஜி.ஆர்., கார்டன் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான, மேன்-ஹோல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூன்றாவது செக்டரில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அதில், தினமும் ஏராளமானோர்

உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் முதியோர் அதிகம் வந்து செல்கின்றனர். தற்போது, பூங்கா முகப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான மேன்-ஹோல் அமைக்கப்படுவதற்கு, அப்பகுதி நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்பகுதியில், எதிர்காலத்தில் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், கழிவுநீர் வெளியேறினால் சுகாதார சீர்கேடு ஏற்படும். பூங்காவை பயன்படுத்தும் ஏராளமான முதியோர், சிறார்கள் பாதிக்கப்படுவர். எனவே, பூங்காவை விட்டு தள்ளி மேன்-ஹோல் அமைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story