அரசுப் பள்ளி அருகே சர்வே செய்ய எதிர்ப்பு - மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்ப்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு பின் புறத்தில் பள்ளிக்கு சொந்தமானதாக கூறப்படும் புறம்போக்கு இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக இரு குடும்பங்கள் வீடு கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர். தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. நீதிமன்றம் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்ய வந்துள்ளனர். தகவல் அறிந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு சர்வே மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடம் கட்டிடத்திற்கு பயன்ப்படுத்த உள்ள இடத்தை தனி நபருக்கு வீட்டு மனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வே பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவவியர்களும் வகுப்புகள் புறக்கணித்து பள்ளி முன்பு கூடி கோஷங்கள் எழுப்பினர். இதனை அடுத்து சர்வே பணிகள் தற்காலிகமாக கைவிட்டு வருவாய்த் துறையினர் திரும்பிச் சென்றனர்.