தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
கருத்தரங்கம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 06.02.2024 மற்றும் 07.02.2024 ஆகிய இரண்டு நாள்கள் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற்றன. ஆட்சிமொழிக் கருத்தரங்கில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023 2024 ஜவகர்லால் நேரு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக 06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கில் முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மா. பால் இராசேந்திரம் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஆட்சிமொழி, வரலாறு சட்டம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள் என்னும் தலைப்பில் உலகத் திருக்குறள் பேரவை மோ. அன்பழகன் உரையாற்றினார். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) செ. கனகலட்சுமி ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு எடுத்தார். முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கா. சரவணகுமார் கணினித் தமிழ் மற்றும் அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் என்னும் தலைப்பிலும், தமிழ்ச்செம்மல் விருதாளர் இரா. இராசு மொழிப் பயிற்சி. கலைச் சொல்லாக்கம் என்னும் தலைப்பிலும் பயிற்சி வகுப்புகள் எடுத்தனர். ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் இந்நிகழ்ச்சிகளின் துணை இயக்குநர் செ. கனகலட்சுமி செயல்பட்டார்.